‘கஜா’ புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – கலெக்டர் அன்புசெல்வன் பேட்டி

Daily thanthi: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகி இருக்கிறது. ‘கஜா’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வருகிற 15-ந் தேதி கடலூருக்கும் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

 

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் சரயூ, வசுமகாஜன், பிரசாத், வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பூவராகன் மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

‘கஜா’ புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை 683 ஊராட்சிகள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள் உள்ளன. புயல் பாதிப்பின் போது, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்காக ஒன்றியத்துக்கு ஒரு துணை கலெக்டர் தலைமையில் ஒரு குழு என மொத்தம் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அதேபோல் 5 நகராட்சிகளில் கடலூர் பெரு நகராட்சியில் மட்டும் 2 துணை கலெக்டர்களை கொண்ட 2 குழுக்களும், மற்ற 4 நகராட்சிகளில் தலா ஒரு குழுவீதம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இந்த குழுக்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

புயல் தாக்குவதற்கு முன்னதாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக 40 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தேவைப்பட்டால் அரசு பள்ளிகள், சமுதாய கூடங்களிலும் கூடுதலாக பொதுமக்களை தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ஒருவேளை மாவட்டத்தை புயல் தாக்கினால் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை அப்புறப்படுத்துவது போன்ற உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக 167 பொக்லைன் எந்திரங்கள், 155 ஜெனரேட்டர்கள், 152 மரம் அறுக்கும் எந்திரங்கள், நவீன விளக்குகள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

 

1569total visits,2visits today

Comments (0)
Add Comment